உத்தரப் பிரதேச வளர்ச்சியில் மேலும் ஒரு புதிய மைல்கல்! ஜான்சி மாவட்டத்தில் அமைகிறது இரண்டாவது நொய்டா
லக்னோ: உத்தரப் பிரதேசத்திற்கு நொய்டா மிக முக்கியமான தொழில் நகரமாகும். இருப்பினும் மற்றொரு தொழில் நகரத்தை உருவாக்கும் திட்டத்தை யோகி ஆதித்யநாத் முன்மொழிந்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார்.
அதன்படி அவர் அறிவித்துள்ள மற்றொரு திட்டம்தான் புதிய தொழில் நகர திட்டம். தற்போது வரை உத்தரப் பிரதேசத்திற்கு நொய்டா மிக முக்கிய தொழில் நகரமாக இருந்து வருகிறது. மாநிலத்தின் இரண்டாவது தொழில் நகரத்தை உருவாக்குவதைக் குறிக்கும் வகையில், புந்தேல்கண்ட் தொழில் மேம்பாட்டு ஆணையத்தை நிறுவுவதற்கு யோகி ஆதித்யநாத் தலைமையிலான உ.பி மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஜான்சி மாவட்டத்தில் கட்டப்படும் இந்த நகரம் பாதுகாப்பு வழித்தடத்தை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தின் ஆரம்ப கட்டமாக ரூ.6,312 கோடி செலவில் 35,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும்.
நொய்டா கட்டமைக்கப்பட்டு 47 ஆண்டுகள் ஆகிறது. இதனை குறிக்கும் வகையில் ஜான்சி மாவட்டத்தில் தற்போது புதிய நகரம் கட்டமைக்கப்பட இருக்கிறது. இது குறித்து அமைச்சர் சுரேஷ் கண்ணா கூறுகையில், "இந்த திட்டம் உத்தரப் பிரதேசத்திற்கு மற்றொரு மைல் கல்லாக அமையும். ஏராளமான வேலை வாய்ப்புகளை இது உருவாக்கும். இந்த தொழில் நகரம் ஜான்சி-குவாலியர் வழித்தடத்தில் அமைக்கப்பட்டுள்ளது, இது தேசிய நெடுஞ்சாலை வழியாக நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களையும் இணைக்கும்" என்று கூறியுள்ளார்.
Comments:
Leave a Reply