Thursday, November 21
Breaking News:
Breaking News:
கனமழையால் வேரோடு சாய்ந்து விழுந்த மரம்.. தஞ்சையில் பள்ளி மாணவி பலி.. ரூ. 5 லட்சம் முதல்வர் நிவாரணம்

கனமழையால் வேரோடு சாய்ந்து விழுந்த மரம்.. தஞ்சையில் பள்ளி மாணவி பலி.. ரூ. 5 லட்சம் முதல்வர் நிவாரணம்

தஞ்சாவூர் : சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையில் உள்ள பள்ளி வளாகத்தில் மரம் முறிந்து விழுந்து பத்தாம் வகுப்பு மாணவி உயிரிழந்தார். உயிரிழந்த மாணவி சுஷ்மிதாசென்னின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரண உதவி அறிவித்துள்ளார்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம், பாபநாசம், அய்யம்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.அய்யம்பேட்டை அருகே கண்டக்கரயம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருடைய மனைவி பத்மா. இவர்களுடைய மூத்த மகள் சுஷ்மிதாசென், வயது 15. கணபதி கிராமம் தட்டாரத்தெருவை சேர்ந்தவர் கந்தன். இவருடைய மகள் ராஜேஸ்வரி,15. இவர்கள் இருவரும் அய்யம்பேட்டை அருகே பசுபதிகோவிலில் உள்ள புனித கபிரியேல் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தனர்.நேற்று மாலை இந்த பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது பள்ளியில் வகுப்புகள் நிறைவு பெற்றதால் சுஷ்மிதாசென்னும், ராஜேஸ்வரியும் வீட்டுக்கு செல்ல பள்ளி வகுப்பறையில் இருந்து வெளியே வந்த போது வளாகத்தில் இருந்த மரம் ஒன்று திடீரென வேரோடு சாய்ந்தது. அந்த நேரத்தில் அங்கு நின்று கொண்டிருந்த சுஷ்மிதாசென், ராஜேஸ்வரி ஆகிய இருவர் மீதும் மரம் விழுந்தது. இதில் இரண்டு மாணவிகளும் மரத்தின் அடியில் சிக்கிக்கொண்டனர். இதனால் அதிா்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் ஆசிரியைகள் 2 மாணவிகளையும் மீட்டு சிகிச்சைக்காக அய்யம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் சுஷ்மிதாசென், ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். ராஜேஸ்வரி மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

உயிரிழந்த மாணவி குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கக்கோரி சம்பந்தப்பட்ட மாணவியின் உறவினர்கள் திடீரென அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு எதிரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், நிவாரண உதவியும் அறிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "தஞ்சாவூர் மாவட்டம். பாபநாசம் வட்டம், பசுபதிகோவில்- 1 கிராமத்தில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்று வரும் மாணவிகள் பாபநாசம் வட்டம் உள்ளிக்கடை, கண்டகரையத்தைச் சார்ந்த செல்வி சுஷ்மிதாசென். தபெசெந்தில்குமார் (வயது-15) மற்றும் பாபநாசத்தைச் சேர்ந்த செல்வி இராஜேஸ்வரி த/பெ.கந்தன் (வயது-15) ஆகிய இருவர் மீதும் நேற்று மாலை பெய்த மழை மற்றும் காற்றின் காரணமாக பள்ளியின் அருகிலுள்ள மரம் வேறோடு சாய்ந்து விழுந்ததில் செல்வி சுஷ்மிதாசென் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன்.

மேலும் இவ்விபத்தில் படுகாயமடைந்து தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள செல்வி இராஜேஸ்வரிக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்.மாணவி செல்வி சுஷ்மிதாஷென்னை இழந்து வாடும் பெற்றோருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு அவரது குடும்பத்தினருக்கு ஐந்து இலட்சம் ரூபாயும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் செல்வி இராஜேஸ்வரிக்கு ஒரு இலட்சம் ரூபாயும் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்," இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது


Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *