மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூபாய் 3 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் 10.50 மீட்டர் அளவிற்கு சாலையின் இரு புறமும் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையத்தில் சுமார் 12,000 பொதுமக்கள் வசித்து வருகின்றனர். உலகப் புகழ்பெற்ற பவானி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் திரளான பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டு செல்வது வழக்கம்.
அம்மனுக்கு உகந்த விஷேச மாதமான ஆடி மாதம் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்டு செல்வர். அந்த அளவிற்கு பெரியபாளையும் மிகவும் புகழ்பெற்று விளங்குகிறது.
ஆனால், இவ்வாறு புகழ் பெற்ற பெரியபாளையத்தில் மழைக் காலங்களில் மழைநீர் செல்ல வழி இல்லாதது மிகவும் வருந்தக்கூடிய விஷயமாகும். இந்த பகுதியில் மழைநீர் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலைகளில் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் பல்வேறு பாதிப்புக்களுக்கு இடையே பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் இப்பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்கிற அப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூபாய் 3 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் 10.50 மீட்டர் அளவிற்கு சாலையின் இரு புறமும் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது.
ஆனால் செய்யும் பணியை திருந்த செய்யாமல் ஆங்காங்கே குறைகள் வைப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இதுபற்றி பொதுமக்களிடம் கேட்டபோது, பெரியபாளையத்தில் கால்வாய் பணிகள் நடைபெற்று வரும் இடத்தில் சிலர் சாலையை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டி உள்ளனர். இதனை அதிகாரிகள் அகற்றி அளவீடு செய்யவில்லை. இதனால் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
அதேபோல் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. ஆங்காங்கே கால்வாய் பணிகளுக்காக தோண்டப்படும் பள்ளங்களை உடனடியாக மூடாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். இதனால் பெரியபாளையம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
கால்வாயில் காண்கிரீட் போடுவதற்காக பயன்படுத்தும் கம்பிகள் வெளியே நீட்டிக்கொண்டு ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் வயதானவர்கள், பெண்கள், சிறுவர்கள் அந்த பாதையில் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். இந்த பணிகள் நடைபெறும் இடத்தில் நெடுஞ்சாலை துறை சார்பில் எச்சரிக்கை அறிவிப்பு பலகையும் வைக்கப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து அடிபடும் அபாயம் உருவாகிறது.
கால்வாய் தோண்டும்போது பல இடங்களில் குடிநீர் இணைப்பு கால்வாய்கள் சேதமடைந்துள்ளது. இதனால் வாரக் கணக்கில் மக்கள் குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்காமல் பணம் கொடுத்து வாங்கும் பரிதாபநிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் மெத்தன போக்கை இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் காரணம்.
மழைக்காலத்திற்குள் சாலை பணிகளையும், மழைநீர் வடிகால்வாய் பணிகளையும் தமிழக முதல்வர் முறையாகவும், தரமாகவும் அமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். ஆனால் முதல்வரின் அறிவிப்பையும் கடந்து அதிகாரிகள் மெத்தனமாக பணிகளை மேற்கொள்கின்றனர். அதிகாரிகள் இதனை கவனிக்கவில்லை என்றால் முதலமைச்சரின் தகவலுக்கு இதனை கொண்டு செல்வோம் என்று பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்
Tags:
Comments:
Leave a Reply