திருநெல்வேலி மாவட்டம் உவரி கடற்கரையில், சர்வதேச கடற்கரை தூய்மை பணி தினம்
திருநெல்வேலி மாவட்டம் உவரி கடற்கரையில், சர்வதேச கடற்கரை தூய்மை பணி தினம்! பள்ளி மாணவ,மாணவிகள் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று, கடற்கரையை தூய்மைப்படுத்தினர்!
திருநெல்வேலி, செப்டம்பர்.16:- "பாதுகாப்பான கடல்! தூய்மையான கடல்" என்னும் குறிக்கோளை, தாரக மந்திரமாகக் கொண்டு, 1986-ஆம் ஆண்டு முதல், ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் 3-வது சனிக்கிழமைகளில், "சர்வதேச கடற்கரை தூய்மைப்பணி தினம்" கடைபிடிக்கப்படுகிறது.அதன் அடிப்படையில்,
தமிழ்நாடு அரசு மாசு கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறை- ஆகியன இணைந்து, திருநெல்வேலி புறநகர் மாவட்டம், உவரி கடற்கரை பகுதிகளை, தூய்மைப்படுத்தும் பணிகளை, நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகளைக் கொண்டு, இன்று (செப்டம்பர்.16) மேற்கொண்டன.
வந்திருந்தவர்களை தேசிய பசுமைப்படையின், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முனைவர் செல்வின் சாமுவேல் வரவேற்றுப் பேசினார். தூய்மைப்பணிகளின் நோக்கம் குறித்து, திருநெல்வேலி மாவட்ட, முதலமைச்சர் பசுமை இயக்கத் தலைவி மு. பூர்ணிமா சங்கரி, விவரித்து பேசினார். மேலநீலிதநல்லூர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்பி கல்லூரி பேராசிரியர் முனைவர் கொம்பையா, விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார். "ஓசோன் தின விழா" சிறப்புரையை, சங்கர்நகர் சங்கர் மேல்நிலைப்பள்ளி தேசிய பசுமைப்படையின், திட்ட ஒருங்கிணைப்பாளர். கவிஞர் கோ கணபதி சுப்பிரமணியன் நிகழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலக சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் அபிநய சுந்தரம், நாட்டு நலப்பணித்திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகச்சாமி, மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர். டி.எப்.ஜோசப் ஆகியோர் பங்கேற்று, வாழ்த்துரை வழங்கினர். பொறியாளர்கள் ஜெபா, ஜெனிஷா, ஜெயப்பிரியா, முன்னாள் தலைமை ஆசிரியர் பவர்சிங்,உவரி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அந்தோணி அம்மாள், கவுன்சிலர்கள் ராஜன்,கவிதா, பள்ளி தலைமை ஆசிரியர்கள் மேரி பிரீடா, ஸ்பிரைனா, மற்றும் ஆசிரிய பெருமக்கள், பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
திசையன்விளை ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி, சமாரியா மேல்நிலைப்பள்ளி, ஹோலி ரெடிமர் மேல்நிலைப்பள்ளி, இடையன்குடி கால்டுவெல் மேல்நிலைப்பள்ளி, உவரி புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி ஆகிய ஐந்து பள்ளிகளைச் சார்ந்த, நூற்றுக்கண்க்கான மாணவ, மாணவிகளுடன், ஊராட்சி தூய்மைப் பணியாளர்கள் கடலோர காவல் படைக்காவலர்கள் ஆகியோரும் இணைந்து, சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவுக்கு, உவரி கடற்கரை பகுதிகளை தூய்மை படுத்தினர். சேகரிக்கப்பட்ட இரண்டு டன் குப்பைகளும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் நெறிமுறைகளின்படி தரம் பிரிக்கப்பட்டு,ஊராட்சி மன்ற தூய்மை பணியாளர்களிடம், முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. தூய்மைப்பணியில் ஈடுபட்ட அனைவருக்கும், பங்களிப்பு மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன
Tags:
Comments:
Leave a Reply