வங்கக்கடலில் ஹெவி டிப்ரசன்.. சுற்றும் சூறாவளி காற்று.. 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு
சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மீனவர்களை எச்சரிக்கும் வகையில் தமிழகத்தில் 9 துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை இயல்பை விட 13 சதவீதம் குறைவாக பெய்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் பாலசந்திரன் கூறியுள்ளார். அக்டோபர் 1 முதல் இன்று வரையிலான இயல்பு அளவான 277.5 மி.மீ.க்கு பதில் 241.7 மி.மீ. மட்டுமே மழை பெய்துள்ளது.
இதனிடையே தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை 0830 மணி அளவில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, விசாகப்பட்டினத்திலிருந்து சுமார் 510 கிலோ மீட்டர் தென்கிழக்கே நிலை கொண்டுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து 16ஆம் தேதி வாக்கில் ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு- வடகிழக்கு திசையில் திரும்பி ஒரிசா கடலோர பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 17-ஆம் தேதி வாக்கில் நிலவக்கூடும். இது 18ஆம் தேதி காலை வடக்கு ஒரிசா - மேற்கு வங்க கடலோரப்பகுதிகளில் நிலவக் கூடும்.
இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள்தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
Comments:
Leave a Reply