எல்லா விலையும் ஏறப்போகுது.. தமிழ்நாட்டில் டோல் கட்டணத்தை உயர்த்தும் மத்திய அரசு! எதிர்க்கும் டிடிவி
சென்னை: தமிழ்நாட்டில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்த உள்ள சுங்க கட்டண உயர்வுக்கான அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளார்
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள அவர், "தமிழ்நாட்டில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்த உள்ள சுங்க கட்டண உயர்வுக்கான அறிவிப்பை திரும்ப பெறுமாறு மத்திய அரசை வலியுறுத்துகிறேன். ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் தமிழ்நாட்டில் உள்ள 29 சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்ட நிலையில் தற்போது மீதமுள்ள சுங்கச் சாவடிகளிலும் கட்டண உயர்வுக்கான அறிவிப்பை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வெளியிட்டுள்ளது.
சாலைகளை சீரமைப்பதில் அக்கறை செலுத்தாத சுங்கச் சாவடிகள் தற்போது பணம் வசூலிக்கும் மையங்களாகவே செயல்பட்டு வருவதாக மக்கள் கருதுகின்றனர். சுங்க கட்டண உயர்வு என்பது வணிகர்கள், லாரி உரிமையாளர்கள் மட்டுமல்லாது, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து பொதுமக்களையும் கடுமையாக பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வெளியிட்டுள்ள கட்டண உயர்வை திரும்ப பெறுவதோடு, தமிழ்நாட்டில் காலாவதியாகியும் இயங்கக் கூடிய சுங்கச் சாவடிகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்." என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
சுங்கக்கட்டண உயர்வுக்கு பலர் கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள். தேமுதிக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருக்கிறது. விக்கிரவாண்டி, ஓமலூர், தருமபுரி, சமயபுரம் என தமிழ்நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 28 சுங்கச்சாவடிகளில் நாளை முதல் கட்டண உயர்த்தப்படுகிறது. ரூ.5 முதல் அதிகபட்சமாக ரூ.150 வரை கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 55 சுங்கச்சாவடிகளில் 27 சுங்கச்சாவடிகளில் கடந்த ஏப்ரல் மாதம் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டன. மீதம் இருக்கும் சுங்கச்சாவடிகளிலும் தற்போது கட்டணம் உயர்த்தப்படுகிறது.
தேசிய நெடுஞ்சாலைகளில் பராமரிப்புப் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாமல் இவ்வாறு சுங்கக்கட்டணம் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் உயர்த்தப்படுவதாக கூறப்படுகிறது. சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுவதால் அனைத்து வகையான அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் என்றும் ஏழை, நடுத்தர மக்கள் கடுமையான பாதிக்கப்படுவார்கள் என்று பலர் கூறி வருகிறார்கள். அதேபோல், சுங்கக்கட்டணம் வசூலிப்பதில் வெளிப்படைத்தன்மையும் இல்லை என்றும், சென்னையை அடுத்த செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் விதிகளை மீறி ரூ.28 கோடி கூடுதல் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு இருப்பதாக இந்திய தலைமைக் கணக்காயரின் தணிக்கை அறிக்கை தெரிவித்து உள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் 2019 ஆகஸ்ட் முதல் 2020 ஜுன் வரை அந்த சுங்கச்சாவடியில் பயணித்த 1.17 கோடி வாகனங்களில் 62.37 லட்சம் வாகனங்கள் மிக முக்கியமானவர்களின் ஊர்திகள் என்று குறிப்பிட்டு கட்டண விலக்கு வழங்கப்பட்டு உள்ளது. அனைத்து சுங்கச்சாவடிகளின் மொத்த வருவாயை தணிக்கை செய்து அதன் அடிப்படையில் சுங்கச்சாவடிகளை தொடர்வது பற்றி முடிவு செய்ய பலர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
Comments:
Leave a Reply