காரை திருடி விட்டு திருடன் செய்த காரியம்! நல்லவனா? இல்ல கெட்டவனா?
இந்தியாவில் கார் திருட்டு சம்பவங்கள் நடைபெறுவது வாடிக்கையான ஒரு விஷயமாக மாறி விட்டது. கார் திருடு போய் விட்டால், மீண்டும் கிடைப்பது சற்று சிரமமான காரியம்தான். கஷ்டப்பட்டு சேமித்த பணத்தில் வாங்கிய கார் திருடு போனால், உரிமையாளருக்கு நிச்சயமாக அது மன வேதனையை ஏற்படுத்தும்.
ஆனால் ஒரு சில கார் திருட்டு சம்பவங்களில், சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடக்கும். அப்படி ஒரு ருசிகரமான சம்பவம் அஸ்ஸாம் மாநிலத்தில் தற்போது நடைபெற்றுள்ளது. கார் திருட்டில் ஈடுபட்ட கொள்ளையன், அதன் உரிமையாளருக்கு குறிப்பு ஒன்றை விட்டு சென்றுள்ளார். இதுகுறித்த தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.
அஸ்ஸாம் மாநிலம் டாரங் பகுதியை சேர்ந்தவர் அப்துல் அஜீஸ். இவர் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza) கார் ஒன்றை வைத்திருந்தார். இது இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார்களில் ஒன்றாகும்.
கடந்த செவ்வாய் கிழமை அதிகாலையில், இந்த கார் திருடு போயுள்ளது. அன்றைய தினம் அதிகாலை சுமார் 4.15 மணியளவில், அப்துல் அஜீஸ் வீட்டில் இருந்தார். அப்போது கொள்ளையன் ஒருவன், பின் பக்க கதவை உடைத்து, வீட்டிற்குள் நுழைந்துள்ளான். இதைக்கண்டதும் அப்துல் அஜீஸ் அதிர்ச்சியடைந்தார்
அப்துல் அஜீஸின் கடுமையான எதிர்ப்புகள் மற்றும் போராட்டங்களுக்கு மத்தியிலும், அவரது கார் சாவியை எடுத்து கொண்டு கொள்ளையன் வெளியேறியுள்ளான். பின்னர் காரை எடுத்து கொண்டு அவன் தப்பி விட்டான். ஆனால் வீட்டின் சுவரில் கொள்ளையன் ஒரு தகவலை எழுதி வைத்து விட்டு சென்றுள்ளான்.
''உங்கள் கார் 3 நாட்களில் உங்களிடமே திருப்ப ஒப்படைக்கப்படும். எனவே கவலைப்பட வேண்டாம். இதுகுறித்து யாரிடமும் தகவல் தெரிவிக்க கூடாது. காவல் துறையினரிடம் புகார் தெரிவித்தால், காரை திரும்ப ஒப்படைக்க மாட்டேன். டென்ஷன் ஆக வேண்டாம்'' என அப்துல் அஜீஸ் வீட்டு சுவரில் எழுதப்பட்டுள்ளது.
இது குழப்பங்களை ஏற்படுத்தியதால், அப்துல் அஜீஸ் நேராக காவல் நிலையத்திற்கு சென்று புகாரை பதிவு செய்து விட்டார். இந்த புகாரின் பேரில், காவல் துறையினர் தற்போது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். திருடு போயுள்ள மாருதி சுஸுகி பிரெஸ்ஸா, கொஞ்சம் விலை உயர்ந்த கார்தான்.
Tags:
Comments:
Leave a Reply