பரணி பார்க் கல்விக் குழுமத்தில் “பொங்கல் விழா கொண்டாட்டம்”
பரணி பார்க் கல்விக் குழுமத்தில் பொங்கல் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு பரணி பார்க் கல்விக் குழுமத்தின் தாளாளர் S.மோகனரெங்கன் தலைமை வகித்தார். செயலாளர் திருமதி.பத்மாவதி மோகனரெங்கன், அறங்காவலர் சுபாஷினி அசோக்சங்கர் முன்னிலை வகித்தார்.
பரணி பார்க் கல்விக் குழுமத்தின் முதன்மை முதல்வர் முனைவர் C.ராமசுப்ரமணியன் பேசுகையில், “தமிழரின் பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம், விவசாயத்தை போற்றும் வகையிலும் தை மாதப்பிறப்பில் அனைவருக்கும் அனைத்தும் தழைத்தோங்க வேண்டும் என்று இறைவனை வழிபடும் நிகழ்வாக பொங்கல் விழா ஒவ்வொரு வருடமும் பரணி கல்விக்குழுமத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் இந்த ஆண்டு நவ தானியம் இட்டு நவ பொங்கல் வைத்து திருக்குறள் முற்றோதல் செய்து தமிழர் பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றின் சிறப்புகளை உணர்ந்து அவற்றை நம் எதிர்கால தலைமுறைக்கு கொண்டு செல்லப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமான பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது” என்று கூறினார்.
பொங்கல் விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு பரணி பார்க் பள்ளி, பரணி வித்யாலயா பள்ளி, எம்.குமாரசாமி கல்வியியல் கல்லூரியிலிருந்து மொத்தம் 9 பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டு, விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் மாடுகளுக்கும், சூரிய பகவானுக்கும் படைக்கப்பட்டு அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடையணிந்து வந்திருந்தனர். விவசாயம் மற்றும் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் காளைகள் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழர் பாரம்பரியத்தை போற்றும் வகையில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இவ்விழாவில் பெற்றோர்களுக்கு இசை நாற்காலி, பலூன் உடைத்தல், பானை உடைத்தல் போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர்.
இவ்விழாவில் பரணி பார்க் முதல்வர் K.சேகர், பரணி வித்யாலயா முதல்வர் S.சுதாதேவி, எம்.குமாரசாமி கல்வியியல் முதல்வர் P.சாந்தி, துணை முதல்வர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், இருபால் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
Comments:
Leave a Reply