மதிய உணவில் முட்டைகள் மாயம்.. திருப்பூரில் முட்டைகளை தூக்கும் அரசியல்வாதிகள்? அதிரடி காட்டிய கலெக்டர்
ஒவ்வொவரும் வாரமும் திங்கள்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் வாராந்திர குறைதீர் கூட்டம் தமிழகம் முழுவதும் நடைபெறும். அந்த கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை, புகார்களை தெரிவிக்கலாம்.
அப்படித்தான் திருப்பூரில் நேற்று வாராந்திர குறைதீர் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அனைத்துப் பொதுத் தொழிலாளர் நலச் சங்கத்தின் பொதுச் செயலர் சரவணன் கூறுகையில், "தமிழக அரசு மதிய உணவு திட்டத்தின் கீழ் அனைத்து வேலை நாட்களிலும் பள்ளி மாணவர்களுக்கு குறைந்தபட்சம் 46 கிராம் எடையுள்ள சூடான முட்டைகளை , சத்தான உணவுடன் வழங்கி வருகிறது.
ஆனால் திருப்பூரில் உள்ள பல பள்ளிகளில் முழு, வேகவைத்த முட்டை வழங்கப்படவில்லை. கடந்த வாரம் போயம்பாளையத்தில் உள்ள அரசுப் பள்ளிக்குள் சென்றபோது, பாதி முட்டைகள் தான் குழந்தைகளுக்கு வழங்கப்படுவதை கண்டேன். நான் சமையல்காரரிடம் கேட்டபோது, ஒவ்வொரு பத்து முட்டைகளிலும் இரண்டு அல்லது மூன்று முட்டைகள் அழுகியதாகவும், அவற்றை அவர்கள் தூக்கி எறிந்துவிடுவதாகவும் கூறினார்கள். ஆனால் உண்மையில், உள்ளூர் அரசியல்வாதிகள் பள்ளியில் இருந்து முட்டைகளை எடுத்துச் செல்கிறார்கள் என சரவணன் ஆட்சியரிடம் குற்றம்சாட்டினார். இதே நிலை தான் திருப்பூரின் பிச்சம்பாளையம், இடுவம்பாளையம், நேரு நகர், நெருப்பெரிச்சல், வீரபாண்டி, குமார் நகர் பள்ளிகளிலும் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து திருப்பூரைச் சேர்ந்த மதிய உணவு பணியாளர் ஒருவர் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "திருப்பூர் நகரில் உள்ள 119 அங்கன்வாடி மையங்களில் ஒவ்வொரு வாரமும் முட்டை கொள்முதல் செய்யப்பட்டு இருப்பு வைக்கப்படும்.ஆனால், மாணவர்களின் வருகை ஒவ்வொரு நாளும் மாறுபடும். இரண்டு அல்லது மூன்று மாணவர்கள் வராமல் போகக்கூடும். அவற்றை சரிசெய்வதற்காக அரை முட்டைகளை சமையல் அம்மாக்கள் வெட்டி வழங்குவார்கள். ஆனால் பல நேரங்களில், உள்ளூர் அரசியல்வாதிகள்
தங்கள் சொந்த உபயோகத்திற்காக முட்டைகளை எடுத்துச் சென்றுவிடுகிறார்கள். மதிய உணவு தொழிலாளர்களாக எங்களால் அரசியல்வாதிகளை எதிர்த்து நிற்க முடியாது என்பதால் விட்டுவிடுகிறோம்
வேறு வழி இல்லாமல் நாங்கள் முட்டைகளைப் பிரித்து குழந்தைகளுக்கு சமமாக விநியோகிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.இதனால் அரைமுட்டை வழங்கும் நிலை ஏற்படுகிறது" என்றார் அந்த பெண் பணியாளர்
இந்த விவகாரங்கள் குறித்து சரவணன் மாவட்ட ஆட்சியரிடம் நேற்று புகார் அளித்த நிலையில், விசாரணை நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் உறுதியளித்தார். மேலும் அனைத்து பள்ளிகளிலும் முட்டை இருப்பை ஆய்வு செய்யவும், சரிபார்க்கவும் சிறப்புக் குழுவை அமைத்து உத்தரவிட்ட ஆட்சியர், இப்பிரச்னையில் தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
Comments:
Leave a Reply