Monday, December 23
Breaking News:
Breaking News:
அசுர வேகத்தில் பரவும் டெங்கு.. தமிழகத்தில் ஒரு வாரத்தில் 113 பேர் பாதிப்பு..

அசுர வேகத்தில் பரவும் டெங்கு.. தமிழகத்தில் ஒரு வாரத்தில் 113 பேர் பாதிப்பு..

சென்னை: தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 113 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. செப்டம்பர் 1 முதல் 14 வரை 210 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மழை காலம் தொடங்கும் முன்பாகவே டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து விட்டது. சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு ஒரு சிறுவன் பலியான நிலையில் புதுச்சேரியில் இரண்டு பேர் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளனர். டெங்கு என்பது ஒரு வகையான வைரஸ் காய்ச்சல். நல்ல தண்ணீரில் உருவாகக்கூடிய ஏடிஸ் ஏஜிப்தி' என்ற ஒரு வகை கொசுக்கள் மூலம் இந்த வைரஸ் பரவுகிறது. ஏடிஸ்' கொசுக்கள் மூன்று வாரங்களுக்குமேல் உயிர்வாழும். பகல் நேரங்களில் மட்டுமே கடிக்கும். உடல் மற்றும் கால்களில் கறுப்பு மற்றும் வெள்ளைநிறப் புள்ளிகள் கொண்ட உடலமைப்பைக் கொண்டிருக்கும்.
நல்ல தண்ணீரில் மட்டுமே இந்த கொசுக்கள் வசிக்கும். மழை காலங்களில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரிக்கும். வீடுகளில் சரியாக மூடப்படாத டிரம்கள், தண்ணீர் பிடிப்பதற்காக பைப்லைன்கள் அருகே தோண்டப்பட்ட குழிகள், மொட்டைமாடிகளில் போட்டுவைத்திருக்கும் உபயோகமற்ற பொருள்கள், காலிமனைகளில் கிடக்கும் பிளாஸ்டிக் கப்கள், பயனற்ற பொருள்கள், வீடுகளில் சரியாக மூடப்படாத தரைத் தொட்டிகள் , மேல்நிலைத் தொட்டிகள், டயர்கள், பயன்படுத்தாத உடைந்த சிமென்ட் தொட்டிகள், நீண்டகாலமாகக் கழுவப்படாத தொட்டிகள் போன்றவற்றில் தேங்கியிருக்கும் நல்ல தண்ணீரில் ஏடிஸ்' கொசுக்கள் முட்டையிட்டுப் பெருகுகின்றன. இது டெங்கு பாதிப்புள்ளவர்களைக் கடித்துவிட்டு மற்றவர்களைக் கடிக்கும்போது ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவுகிறது.
காய்ச்சல் 3 நாள்களுக்கு மேல் நீடித்தால், உடனே மருத்துவமனைக்குச் சென்று டெங்கு காய்ச்சல் இருக்கிறதா என்று பரிசோதனை செய்து கொள்வது அவசியம். டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க சுற்றுப்புறங்களை சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும். உடலை முடிய உடைகளை அணிய வேண்டும். கழிவறைகளை சுத்தமாக சுகாதாரமாக பராமரிக்க வேண்டும். கொசு கடிக்காத வகையில் உடலை மூடி உடை அணிய வேண்டும் என சுகாதாரத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது
சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "மதுரவாயல் பகுதியில் 4 வயது சிறுவன் டெங்கு பாதிப்பால் மரணம் அடைந்திருக்கிறார். கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக, டெங்கு என்பது கட்டுக்குள் இருந்து வருகிறது. இந்த ஆண்டும் கூட மிகப் பெரிய அளவில் கட்டுக்குள்தான் இருந்து வருகிறது என்றார். இருப்பினும், நேற்று வரை டெங்கு பாதிப்புக்குள்ளாகி, மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 253 பேர். இந்த 253-ல், கடந்த ஜனவரி 1ம் தேதி தொடங்கி செப்டம்பர் 10-ம் தேதி வரை 3 பேர் டெங்குவால் இறந்துள்ளனர் என்று கூறினார். டெங்கு பரவாமல் தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்றாலும் மழையும் வெயிலும் மாறி மாறி சீதோஷ்ண நிலை புதுவிதமாக இருப்பதால் கொசுக்களின் உற்பத்தியும் அதிகரித்து வருகிறது. இதனால் காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனிடையே தமிழகம் மற்றும் புதுவையில் டெங்கு பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 113 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் தற்போது வரை தமிழகத்தில் மொத்தம் 204 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 15 முதல் 20 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதிசெய்யபட்டுள்ளது என்றும் மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. மதுரை மாநகராட்சியில் 7 நாட்களில் 11 குழந்தைகள் உட்பட 37 பேருக்கு பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று 5 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 2 வாரத்தில் 37 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. டெங்கு பாதிப்புக்குள்ளான பகுதிகளில் சுகாதாரப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார்

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *