Wednesday, October 16
Breaking News:
Breaking News:
கோடை காலத்தில் சந்திக்கும் கண் பிரச்சனைகளும்.. அதை தவிர்க்கும் வழிகளும்...

கோடை காலத்தில் சந்திக்கும் கண் பிரச்சனைகளும்.. அதை தவிர்க்கும் வழிகளும்...

கோடைக்காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் நமது சருமம் மட்டும் பாதிக்கப்படுவதில்லை, உடலின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு விதமாக பாதிக்கப்படுகின்றன. வெயில் காலத்தில் எந்த பிரச்சனைகளையும் சந்திக்கக்கூடாதெனில், நீர் அதிகம் பருக வேண்டும், வெளியே தேவையின்றி செல்வதைத் தவிர்க்க வேண்டும், வெப்ப மயக்கத்தைத் தடுக்கும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

முக்கியமாக கோடையில் கண் தொடர்பான பிரச்சனைகளை நிறைய பேர் சந்திக்கக்கூடும். ஏனெனில் சூரியக்கதிர்களில் இருந்து வெளிவரும் புறஊதாக் கதிர்கள் எப்படி சருமத்தை சேதப்படுத்துகிறதோ, அதேப் போல் அதிகப்படியான வெப்பம் மற்றும் சூரியக்கதிர்கள் கண்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

கண் வறட்சி கண் வறட்சி என்பது ஒரு பருவகால நிலை அல்ல. இது கோடைக்காலத்திலும் ஏற்படலாம். ஏனெனில் கோடைக்காலத்தில் அதிகப்படியான வெப்பத்தால், கண்களில் உள்ள நீர் படலம் ஆவியாகிறது. இப்படி கண்களில் போதுமான அளவு நீர்ச்சத்து இல்லாத போது கண் வறட்சி ஏற்படுகிறது. இந்த கண் வறட்சி அதிகரிக்கும் போது, அது கண்களில் எரிச்சல் மற்றும் அரிப்பை உண்டாக்கும்.

கோடைக்காலத்தில் கண் வறட்சியைத் தவிர்க்க வேண்டுமானால், நீர் அதிகம் குடிக்க வேண்டும் மற்றும் அதிகபட்ச வெயில் கொளுத்தும் நேரத்தில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். அப்படியே செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டால் சன் கிளாஸ் அணிந்து கொண்டு செல்ல வேண்டும்.

விழி வெண்படல அழற்சி (Conjunctivitis) மிகவும் பொதுவான ஒரு கண் நோய் தான் விழி வெண்படல அழற்சி. இதை மெட்ராஸ் ஐ என்று அழைப்பதுண்டு. இந்த அழற்சியானது ஒன்று அல்லது இரண்டு கண்களிலும் ஏற்படலாம். கண் அரிப்பு, கண் சிவத்தல் மற்றும் கண்களில் இருந்து நீர் வடிதல் போன்றவை இதன் அறிகுறிகளாகும். இது வைரஸ், பாக்டீரியா அல்லது பூஞ்சை தொற்று காரணமாக ஏற்படலாம்.

ஆனால் கோடைக்காலத்தில் இந்த தொற்றுகளை உண்டாக்கும் கிருமிகள் வேகமாக வளர்ச்சியடைவதால், கோடையில் நிறைய பேர் இத்தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவக்கூடியது. இதைத் தவிர்க்க சிறந்த வழி தொற்று உள்ளோரிடம் இருந்து விலகி இருப்பதோடு, கண்களை அடிக்கடி கைகளால் தொடுவதைத் தவிர்ப்பது, கைகளை அடிக்கடி கழுவுவது போன்ற முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

கண் கட்டி (Stye) ஸ்டை அல்லது கண் கட்டி, கண்களின் இமைகளில் பாக்டீரியல் தொற்றுக்களால் ஏற்படும் வீக்கம்/கட்டியாகும். இது மிகுந்த வலி மற்றும் கண்களை சிவந்து போகச் செய்யும். இந்த கண் கண் கட்டி வெளியே வெயிலில் அதிகம் விளையாடும் குழந்தைகளுக்கு அல்லது வெளியே சுற்றுபவர்களுக்கு வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளன. கண் கட்டி இருக்கும் போது கண்களை கடுமையாக தேய்த்தால், அது நிலைமையை இன்னும் மோசமாக்கும்.

அழற்சிகள் கோடையில் பலவிதமான அழற்சிகள் ஏற்பட வாய்ப்புள்ளன. அதில் சில வகையான அழற்சி கண்களை பாதிக்கும். இப்படி கண்களில் அழற்சி ஏற்பட காரணம் அதிகப்படியான வெப்பம், மாசு அளவு, தூசி மற்றும் ஈரப்பதம் போன்றவை. பொதுவாக கண்களில் அழற்சி ஏற்பட்டால், அது அரிப்பு, கண்கள் சிவந்து போதல், வீக்கம் மற்றும் எரிச்சலை உண்டாக்கும்.

கோடையில் கண்களில் ஏற்படும் அழற்சியைத் தடுப்பது எப்படி? கோடைக்காலத்தில் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தவறாமல் மேற்கொண்டு வந்தால், கண்களில் ஏற்படும் அழற்சியைத் தடுக்கலாம். அவை: * தனிப்பட்ட சுகாதாரத்தை பராமரிக்கவும் * கண்களை அடிக்கடி தொடுவதைத் தவிர்க்க வேண்டும். * கைக்குட்டை, டிஷ்யூ, டவல் போன்றவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள் * வெளியே செல்லும் போது கண்ணாடியை அணிய மறவாதீர்கள்.


Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *