Sunday, November 24
Breaking News:
Breaking News:
சனாதன எதிர்ப்பு திடீர் வாபஸ்.. திருவாரூர் அரசு கல்லூரி முதல்வரின் புதிய சுற்றறிக்கையால் பரபரப்பு

சனாதன எதிர்ப்பு திடீர் வாபஸ்.. திருவாரூர் அரசு கல்லூரி முதல்வரின் புதிய சுற்றறிக்கையால் பரபரப்பு

சனாதன எதிர்ப்பு என்ற தலைப்பில் திருவாரூர் அரசு கல்லூரி பேச்சு போட்டியை நடத்துவதாக சுற்றறிக்கை விடுத்த நிலையில் சர்ச்சையானதை தொடர்ந்து சனாதனம் குறித்த கருத்துகள் என மாற்றப்பட்டு மீண்டும் புதிய சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் 115 ஆவது பிறந்தநாள் விழா வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த விழாவையொட்டி பள்ளி, கல்லூரிகளில் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன.அந்த வகையில் தற்போது திருவாரூரில் உள்ள திருவிக அரசு கலைக் கல்லூரியில் ஏற்கெனவே பற்றி எரிந்து கொள்ளும் ஒரு விஷயம் குறித்து பேச்சு போட்டி நடத்தப்படுகிறது. இதுகுறித்து மாணவர்களுக்கு ஒரு சுற்றறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது: இந்த கல்லூரியில் பயிலும் மாணவிகள் சனாதன எதிர்ப்பு பற்றிய தங்களின் ஆழ்ந்த கருத்துகளை அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் தேதி மாலை 3 மணி அளவில் காட்டூர், கலைஞர் கோட்டத்தில் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என குறிப்பிட்டு முதல்வர் அதில் கையெழுத்திட்டிருக்கிறார்.

இந்த சுற்றறிக்கை பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. சனாதன எதிர்ப்பு குறித்த கருத்துகளை கேட்டு மாணவர்களின் மனதில் நஞ்சை விதைப்பதா என வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்து கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு கல்லூரி முதல்வர் ராஜாராமனுக்கு பாஜக கண்டனங்களை தெரிவித்தது. மேலும் அவரை கல்லூரி முதல்வர் பதவியிலிருந்து விலக்கக் கோரி செப்டம்பர் 15 ஆம் தேதி அன்று 3 மணிக்கு அந்த திருவிக அரசு கலைக் கல்லூரி முன்பு தமிழக பாஜக பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் முன்னிலையில் மாவட்டத் தலைவர் பாஸ்கர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.


இந்த நிலையில் கல்லூரி (பொறுப்பு) முதல்வர் ராஜாராமன் மீண்டும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். அதில் இக் கல்லூரி சுற்றறிக்கை நாள் 11.09.2023 ல் கல்லூரியில் பயிலும் மாணவிகள் சனாதனம் பற்றிய தங்களின் கருத்துகளை பகிர்ந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டது. எனினும் கல்லூரி மாணவிகள் அக்கருத்துகளை முதல்வரின் சுற்றறிக்கையின்படி அல்லாமல் தங்களது சொந்த விருப்பத்தின் பெயரிலேயே மேற்காண் பொருள் குறித்து செயல்பட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு எழுத்தாளர்கள் சங்க மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனம் குறித்து பேசியிருந்தார். அவர் பேசுகையில் சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதே நல்லது, சில விஷயங்களைத்தான் எதிர்க்க வேண்டும். சில விஷயங்களை ஒழிக்க வேண்டும். கொரோனா, மலேரியா, டெங்கு போல் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என உதயநிதி பேசியிருந்தார். இந்த கருத்துக்கு உதயநிதிக்கு கண்டனங்கள் குவிகின்றன.


Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *