திருநெல்வேலியில், அமைச்சர் கே.என். நேரு தலைமையில் நடைபெற்ற, 3 மாவட்ட ஆட்சித்தலைவர்கள் பங்கேற்ற, சிறப்புக்கூட்டம்
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை திட்டப்பணிகள் குறித்து ஆய்வு! திருநெல்வேலி, செப்டம்பர்.25:- தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 3 தென்மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்த, சிறப்பு ஆய்வுக்கூட்டம், அத்துறைக்கான அமைச்சர் கே.என். நேரு தலைமையில், தமிழக சட்டமன்ற பேரவை தலைவர் மு.அப்பாவு முனானிலையில், இன்று (செப்டம்பர்.25) காலையில், திருநெல்வேலியில் நடைபெற்றது. கொக்கிரகுளம் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வைத்து நடைபெற்ற இந்த கூட்டத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால் துறை சார்பாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து, விரிவாக விவாதிக்கப்பட்டது. பணிகளின் துவக்கம், தரம், முன்னேற்றம் மற்றும் வரையறுக்கப்பட்டுள்ள கால அளவு, விடுவிக்கப்பட்டிருக்கும் தொகை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து, அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர்களிடம், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் கே.என். நேரு கேட்டறிந்தார். பணிகள் தரமானதாகவும், குறிப்பிட்ட கால அளவுக்கும் வகையிலும் இருக்க வேண்டியதின் அவசியத்தை, அமைச்சர் எடுத்துக் கூறினார். ஆட்சித்தலைவர்களும், துறை அலுவலர்களும், திட்டப்பணிகளை தொடர்ந்து கண்காணித்து வருமாறு, அமைச்சர் அறிவுறுத்தினார். இந்த சிறப்பு ஆய்வுக்கூட்டத்தில், தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச்செயலர் தா.கார்த்திகேயன், நகராட்சி நிர்வாக இயக்குநர் சு.சிவராசு, குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் வி.தட்சணா மூர்த்தி, இணை மேலாண்மை இயக்குநர் வி.சரவணன், பேரூராட்சிகள் இயக்குநர் கிரண் குர்ராலா, மாவட்ட ஆட்சித்தலைவர்கள் திருநெல்வேலி டாக்டர் கா.ப. கார்த்திகேயன், தூத்துக்குடி டாக்டர் செந்தில் ராஜ், தென்காசி துரை ரவிச்சந்திரன், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம். குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் பாளையங்கோட்டை மு. அப்துல் வகாப், தென்காசி பழனி நாடார், சங்கரன் கோயில் ஈ.ராஜா, வாசுதேவல்லூர் டாக்டர் சதன் திருமலை குமார், விளாத்திகுளம் வி.மார்க்கண்டேயன், மாநகராட்சி ஆணையாளர்கள் திருநெல்வேலி வ.கிருஷ்ண மூர்த்தி, தூத்துக்குடி தினேஷ் குமார், மேயர்கள் திருநெல்வேலி பி.எம். சரவணன், தூத்துக்குடி பி.ஜெகன் மற்றும் பல்வேறு துறைகளின் உயர் அலுவலர்கள், கலந்து கொண்டனர்.
Comments:
Leave a Reply