Wednesday, January 22
Breaking News:
Breaking News:
தேர்தலுக்கு தயார்.. ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து எப்போது? சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பதில்

தேர்தலுக்கு தயார்.. ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து எப்போது? சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பதில்

 ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்த தயாராக இருப்பதாகவும் இது தொடர்பாக தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதியன்று மத்திய அரசு ரத்து செய்தது. அதோடு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக இருக்கும் எனவும் மத்திய அரசு கூறியது.

அங்கு சட்டமன்ற தேர்தல் நடத்துவதற்கான பணிகளும் நடப்பதாக கூறப்பட்டாலும் தேர்தல் நடத்தப்படுவது தொடர்பாக இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை தற்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.

ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி முதல் திங்கள் மற்றும் வெள்ளி தவிர மற்ற நாட்களில் வழக்கு விசாரணை மேற்கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. அதன்படி இந்த வழக்கின் விசாரணையானது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஒரு மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மாற்ற இயலுமா? ஜம்மு காஷ்மீர் மீண்டும் எப்போது மாநிலமாக மாற்றப்படும் என்பது தொடர்பாக விரிவான பதிலை மத்திய அரசு அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று பதில் மனு தாக்கல் செய்த மத்திய அரசு, ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து எப்போது என கால வரையறை சொல்ல முடியாது என தெரிவித்துள்ளது. மேலும், ஜம்மு காஷ்மீர், லடாக் என யூனியன் பிரதேசங்களாக உருவாக்கியது தற்காலிக நடவடிக்கைதான் எனவும், மாநில அந்தஸ்து வழங்குவதற்கு முன்பாக ஜம்மு காஷ்மீரை தயார்படுத்த வேண்டியுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

அதேபோல ஜம்மு காஷ்மீரில் எப்போது வேண்டும் என்றாலும் தேர்தலை நடத்த தயராக இருப்பதாகவும் ஆனாலும் இது தேர்தல் ஆணையம் மற்றும் மாநில தேர்தல் ஆணையத்திடம் தான் இந்த முடிவு இருக்கிறது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *