கண்தானத்தை வலியுறுத்தி, பார்வையற்றோர்படும் துன்பங்களை விளக்கிடும் வகையில் எழுச்சியுடன் நடைபெற்ற, விழிப்புணர்வு நடைப்பயணம்!
பாளையங்கோட்டையில், கண்தானத்தை வலியுறுத்தி, பார்வையற்றோர்படும் துன்பங்களை விளக்கிடும் வகையில் எழுச்சியுடன் நடைபெற்ற, விழிப்புணர்வு நடைப்பயணம்! மருத்துவர்கள், செவிலியர்கள், சமூக ஆர்வலர்கள் உற்சாகத்துடன், பங்கேற்பு! திருநெல்வேலி, செப்டம்பர்.1:- கண்தானம் செய்வதின், முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை, மக்கள் மத்தியில் ஏற்படுத்திடும் வகையில், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின், வழிகாட்டு நெறிகளின்படி, 1985-ஆம் ஆண்டு முதல், ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 25-ஆம் தேதி முதல், செப்டம்பர் மாதம் 8-ஆம் தேதி வரை, "தேசிய கண்தான விழிப்புணர்வு இருவார விழா" கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, 38--வது தேசிய கண்தான விழிப்புணர்வு இருவார விழா, தற்போது நாடெங்கிலும் நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக, திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் ரோட்டரி அரவிந்த் கண்வங்கி ஆகியவற்றின் சார்பில்,கண்தானத்தை வலியுறுத்திடும் வகையிலான, விழிப்புணர்வு நடைப்பயணம், இன்று (செப்டம்பர்.1 ) அதிகாலையில், பாளையங்கோட்டையில் நடைபெற்றது. இங்குள்ள தெற்குபஜார் லூர்து நாதன் சிலை முன்பிருந்து துவங்கிய இந்த நடைபயணத்தில், அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், ரோட்டரி சங்க நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள், தங்களுடைய கைகளில் கண்தானம் தொடர்பான, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் மற்றும் அட்டைகளை ஏந்தியவாறு, மிகுந்த உற்சாகத்துடன், நடந்து வந்தனர். வழி நெடுகிலும், துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன. இந்த நடைப்பயணமானது, தெற்கு பஜார், சவேரியார் தேவாலயம், வாட்டர் டேங்க் வழியாக வந்து, சமாதானபுரம் "அரசு அருங்காட்சியகம்" முன்பாக முடிவடைந்தது. முன்னதாக, இந்த நடைப்பயணத்தை, அரவிந்த் கண் மருத்துவமனை முதன்மை ஆலோசகரும், புகழ்பெற்ற கண் மருத்துவ நிபுணருமான டாக்டர் ஆர். ராமகிருஷ்ணன் தலைமையில், அரவிந்த் கண்மருத்துவமனை "தலைமை மருத்துவர்" டாக்டர் ஆர். மீனாட்சி முன்னிலையில், ஐ.ஏ.எஸ். அதிகாரியும், நெல்லை மாநகராட்சி ஆணையாளருமான வ.சிவ கிருஷ்ண மூர்த்தி, கொடி அசைத்து துவக்கி வைத்தார். அரவிந்த் கண் மருத்துவமனை, "கருவிழி பிரிவு தலைமை மருத்துவர்" டாக்டர் வே.அனிதா, நன்றி கூறினார்.-----------------------"TALKS OF INDIA" செய்திகளுக்காக, பாளையங்கோட்டையில் இருந்து, திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் "மேலப்பாளையம்" ஹஸன்.
Comments:
Leave a Reply